யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிப்பு; ஆர்ப்பாட்டம், கைது, ராணுவம் குவிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிப்பு; ஆர்ப்பாட்டம், கைது, ராணுவம் குவிப்பு

2 mins read
18e02782-07e8-4eac-b523-a65e27a473c8
நினைவுச்சின்னத்தை இடிப்பதற்கான தீர்மானத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகமே நிறைவேற்றியதாக அதன் துணை வேந்தர் பேராசிரியர் சி.  சிறீசற்குணராஜா தெரிவித்தார். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் இடிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக அந்தச் சின்னம் எழுப்பப்பட்டு இருந்தது.

அது இடிக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக நுழைவாயில் அருகே பலரும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் உடனடியாக ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் வளாகத்தின் நுழைவாயில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் இரண்டு தமிழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

நினைவுச்சின்னத்தை இடிப்பதற்கான தீர்மானத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகமே நிறைவேற்றியதாக அதன் துணை வேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா தெரிவித்தார். அதேவேளையில், இச் சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என ராணுவம் கூறியது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெளியே வரவேண்டும் என்றும் தங்களைச் சந்தித்து இதன் தொடர்பில் பேசவேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வேளையில், நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதை இலங்கை தமிழ்த் தலைவர்களும், தமிழகத்தின் அரசியல்வாதிகளும் கண்டித்து இருக்கிறார்கள்.

இந்த நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த மாபாதகச் செயல் உலகத் தமிழகர்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தி உள்ளதாகவும் இந்தச் செயலுக்குத் துணைபோன யாழ். பல்கலைக்கழக துணை வேந்தரைத் தான் கண்டிப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதனிடையே, மதிமுக தலைவர் வைகோ, யாழ். பல்கலைக்கழகச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகம் நாளை முற்றுகையிடப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்