மலேசியாவில் கிருமிப் பரவல் பல்கிப் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட அந்நாடு தயாராகி வருகிறது.
மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் பயணம் செய்வதைத் தடுக்க அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா நேற்று தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை தொற்று காரணமாக 16 மரணங்கள் பதிவாயின. மேலும் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். உயிர் பிழைக்க அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி தேவைப்படுகிறது. பயணத் தடை தவிர்த்து, கொவிட்-19 பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்திருப்பதாகவும் டாக்டர் ஆதம் கூறினார்.
கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு பிரதமர் முகைதீன் யாசின் நாளை திங்கட்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் நிலையில் சுகாதார அமைச்சர் இந்தக் கருத்துகளைத் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சரவாக் மாநிலத் தில் ஆக உச்சமாக நேற்று 55 பேருக்கு தொற்று உறுதி ஆனது.

