கொவிட்-19: 'மலேசியாவில் நிலைமை மோசமடையக்கூடும்'

கொவிட்-19: 'மலேசியாவில் நிலைமை மோசமடையக்கூடும்'

2 mins read
cecaa0e1-b4d6-4bef-ae0b-574a831011c5
-

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அதிகரித்து வரும் கொவிட்-19 உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டின் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஸாம் அப்துல்லா இனி வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று மலேசியர்களை எச்சரித்துள்ளார்.புத்தாண்டின் முதல் ஒன்பது நாட்களில் மலேசியாவில் கிருமித் தொற்றுக்கு 71 பேர் பலியாகிவிட்டனர்.

இதையடுத்து, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நூர் ஹிஸாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"கிருமித்தொற்றுக்குக் கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 100க்கும் குறைவான உயிரிழப்புகளே பதிவாகின. ஆனால் இவ்வாண்டின் முதல் ஒன்பது நாட்களில் ஏற்கெனவே 71 பேர் மாண்டுவிட்டனர். நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று அஞ்சுகிறேன்," என்று கூறியுள்ளார்.

மேலும் கொவிட்-19 நோயாளிகளை கையாளுவதில் முன்னிலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் பதிவிட்டிருந்த அவர், "ஒவ்வொரு முன்னணி ஊழியரும் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் நம் அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்.

"நாம் ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்வதன் மூலமும் நம் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்வதன் மூலமும் நாட்டுக்கு உதவுங்கள். கொவிட்-19 என்ற இந்த பேரழிவிலிருந்து நாம் அனைவரும் பாதுகாக்கப்படுவோம்," என்று கூறியிருந்தார். ஆர்-நாட் எனப்படும் தொற்று வீதம் 1.2ஆக இருந்தால் மார்ச் மாதத்தில் ஒருநாளுக்கு 8,000 பேர் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக நூர் ஹிஸாம் எச்சரித்தார். அவ்வாறு நடந்தால் நோயாளிகளைக் கையாள்வதற்கு மருத்துவமனைகள் திணறக்கூடும் என்று மலாய் மெயில் ஊடகம் மேற்கொண்ட கருத்தாய்வில் கலந்துகொண்ட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ள மலேசிய பொருளாதார அமைச்சர் முஸ்தபா முகமதுவின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது அலுவலகம் கூறியுள்ளது. இன்று மலேசியாவில் 2,433 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், ஒன்பது பேர் மாண்டனர்.