தடுப்பூசி: முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

தடுப்பூசி: முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

2 mins read
65f8d3d1-1e73-423f-a6a8-0833eb9431e1
-

புதுடெல்லி: நாடு முழுவதும் எதிர்வரும் 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வழி பேச உள்ளார். தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியதை அடுத்து, முதன்முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் பேச உள்ளார்.அப்போது கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விவரிப்பார் எனத் தெரிகிறது. தடுப்பூசி போடும் ஒத்திகையின் போது அடையாளம் காணப்பட்ட சிக்கல்களை மத்திய சுகாதார அமைச்சு நிவர்த்தி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பிரேசிலுக்கு இரண்டு மில்லியன் 'டோஸ்' தடுப்பூசி வேண்டும் என அந்நாட்டின் அதிபர் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள சீரம் மையம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிகளை பிரேசிலுக்கு வழங்குமாறு அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று அந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.42 வயதான தீபக் மராவி என்ற அந்த ஆடவருக்கு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், பக்க விளைவுகள் ஏதும் இல்லாததால் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

\எனினும் டிசம்பர் 31ஆம் தேதி அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் உடல் கூராய்வு சோதனை மூலமே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தீபக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என பாரத் பயோஎன்டெக் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.