பொங்கல் தினத்தன்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், அங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
"எங்களது மிகச் சிறப்பான பிரிட்டிஷ் தமிழ்ச் சமூகத்திற்கும் உலகிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . நீங்களும் உங்களது குடும்பமும் கூடி மகிழும் நேரத்தில் கொண்டாடுவதற்கும் எதிர்பார்ப்பதற்கும் எவ்வளவோ உள்ளது என நம்புகிறேன்," என்று திரு ஜான்சன் டுவிட்டர் காணொளி ஒன்றில் தெரிவித்தார்.
"முக்கியமாக, நீங்கள் மிக விரைவில் சுவைக்கப் போகும் மிக சுவையான பொங்கல்," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்ட திரு ஜான்சன், வழிபாட்டுக்குரிய இந்த தினம், அறுவடைத் திருநாள் என்பதையும் சுட்டினார்.
பிரிட்டிஷ் சமுதாயத்திற்கு பங்காற்றிய தமிழ்ச் சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குப் பங்காற்றும் வகையில் வர்த்தகங்களை உருவாக்குவது முதல் பள்ளிகளில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் வரை தமிழர்கள் அந்நாட்டில் பணியாற்றியுள்ளதாக திரு ஜான்சன் சுட்டினார். உலகில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் குடும்பத்தை வளர்ப்பதற்கும் பிரிட்டனை ஆகச் சிறந்த இடமாக உருவாக்குவதில் தமிழர்களுக்கு பெருத்த பங்கு இருப்பதாக அவர் கூறினார்.

