அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கும்பலாக அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அமளி விளைவித்த சம்பவத்தின் தொடர்பில் அந்நாட்டின் நாடாளுமன்றம், திரு டிரம்ப்பின் மீது அரசியல் குற்றச்சாட்டைக் கொண்டுவந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் ஓர் அதிபர் மீது இரண்டாவது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்படுவது இதுவே இரண்டாவது முறை.
அத்துமீறலில் ஈடுபட்டவர்களைத் திரு டிரம்ப் தூண்டியதன் பேரில் ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான நாடாளுமன்றத்தில் திரு டிரம்ப்புக்கு எதிராக 232 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு வாக்களித்தோரில் 10 பேர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஒற்றுமையுடன் இருக்கும்படியும் வன்முறையைத் தவிர்க்கும்படியும் அதிபர் டிரம்ப் சக அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தமக்கு எதிரான குற்றச்சாட்டைப்பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
"உணர்ச்சிவயப்படாமல் அமெரிக்கர்கள் ஒரு மக்களாக ஒன்றிணையவேண்டும். நம் குடும்பத்தின் நன்மைக்காக நாம் முன்னோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தமது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்த திரு டிரம்ப், வன்முறை என்றென்றும் நியாயம் கிடையாது என்றும் அமெரிக்கா சட்டங்களைக் கொண்டுள்ள நாடு என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

