விமான விபத்து: பழைய விமானங்களைப் பரிசோதிக்க இந்தோனீசிய அரசு உத்தரவு

விமான விபத்து: பழைய விமானங்களைப் பரிசோதிக்க இந்தோனீசிய அரசு உத்தரவு

1 mins read
a934a965-9c1e-41a4-aa08-5e9e5a7277f7
விபத்துக்குள்ளான இந்தோனீசிய விமானத்தில் பயணம் செய்தோரின் உடல்களை வரிசையாக வைக்கும் மீட்புப் பணியாளர்கள். படம்: ஏஎஃப்பி -

இந்தோனீசியாவில் இம்மாதம் 9ஆம் தேதி ஸ்ரீவிஜயா விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, போயிங் 737 ரக பழைய விமானங்களைப் பரிசோதிக்குமாறு அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மற்ற நாடுகளில் இந்த நடைமுறை வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது," என்று அமைச்சின் பேச்சாளர் அடித்தா இராவாத்தி கூறினார்.

தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் 10,000 அடி உயரத்தில் இருந்து அந்த விமானம் கடலில் விழுந்தது. இந்த விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் பழமையான அந்த விமானத்தில் 62 பேர் பயணம் செய்தனர்.

விமானச் சிதைவுகளையும் உடல் பாகங்களையும் மீட்புப் பணியாளர்கள் கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், விமானத்தின் இரண்டாவது குரல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக குரல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணியை முக்குளிப்பாளர்கள் நேற்று தற்காலிகமாக நிறுத்தியதாக தேசிய தேடி மீட்கும் குழு குறிப்பிட்டிருந்தது.

அந்த விமானம் கடந்த மாதம் 20ஆம் தேதிதான் சேவைக்குத் திரும்பியது. கொவிட்-19 சூழல் காரணமாக விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒன்பது மாதங்களாக அந்த விமானம் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்