ஆப்கானிஸ்தானில் 2 பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் 2 பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை

1 mins read
3031dec6-cbb1-4795-8ea5-fe71fe5193b0
ஆப்கானிஸ்தானில் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். படம்: இபிஏ -

ஆப்கானிஸ்தானில் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சில காலமாக ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது.

குறிப்பாக காபூலில், உயர்மட்ட நபர்களைக் குறிவைத்து கொலை செய்யும் புதிய போக்கு, அங்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை அந்நாட்டின் தலைநகரான காபூலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரைத் துப்பாக்கி ஏந்தியவர்கள் சுட்டுக் கொன்றனர்.

நீதிமன்ற வாகனத்தில் தங்கள் அலுவலகத்திற்கு அவர்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த படுகொலை நடந்ததாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அஹ்மத் பாஹிம் கவீம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது.

"துரதிர்ஷ்டவசமாக, இரண்டு பெண் நீதிபதிகளை இழந்துவிட்டோம். அவர்களின் வாகன ஓட்டுநர் காயமடைந்துள்ளார்," என்று கவீம் கூறினார்.

ஆப்கான் உச்ச நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை 2,500ஆகக் குறைத்துள்ளதாக பென்டகன் அறிவித்த இரண்டு நாட்களில் இந்த படுகொலை நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுமார் இருபது ஆண்டுகளாக நீடிக்கும் போர் காலத்திற்கு மத்தியில், அமெரிக்க துருப்புகளின் ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும் இது.