மலேசியா: கொவிட்-19க்கு எதிரான போரில் தோள்கொடுக்கத் தயாராகும் தனியார் மருத்துவமனைகள்

மலேசியா: கொவிட்-19க்கு எதிரான போரில் தோள்கொடுக்கத் தயாராகும் தனியார் மருத்துவமனைகள்

2 mins read
c58c4440-e684-4b62-9b04-d552cb2ca713
சிலாங்கூரின் செர்டாங்கில் உள்ள எம்ஏஇபிஎஸ் மருத்துவமனையில் கொவிட்-19 நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்க 1,400 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. படம்: தி ஸ்டார் -

மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால், நிலைமையைச் சமாளிக்க தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.

ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தாலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைத்தவுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வந்தனர் என்றார் மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங்.

தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் 5ஆம் பிரிவு வரை எத்தனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது பற்றிய விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று ஏற்பட்டும் அறிகுறிகள் இல்லாத பிரிவு 1 நோயாளிகள், மிதமான அறிகுறிகளுடைய 2ஆம் பிரிவு நோயாளிகள், நிம்மோனியாவுடன் கூடிய 3ஆம் பிரிவு கொரோனா தொற்று நோயாளிகள், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, ஆக்சிஜன் தேவைப்படும் 4ஆம் பிரிவு நோயாளிகள், செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் 5ஆம் பிரிவு நோயாளிகள் என 5 பிரிவுகளில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொவிட்-19க்காக சிகிச்சை பெற்ற நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு அங்கு சிகிச்சைக்கு சேர்ந்த பிறகு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இணையம் வழியாக கொவிட்-19ஐ பாதுகாப்பாக கையாளும் முறை பற்றி சுகாதார அமைச்சு விவரித்தது.

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாகச் செய்த பிறகு, 'கூடிய விரைவில்' அங்கு நோயாளிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றார் திரு குல்ஜித்.

மற்ற நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்காணிப்பில் இருக்கும் நோயாளிகளைத் தங்கவைக்க ஹோட்டல்களும் தயாராக இருப்பதாக மலேசிய ஹோட்டல்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி யப் லிப் செங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்