ஈப்போ: மலேசியாவின் குனுங் செரோவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்தக் கோயிலில் தைப்பூசம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம்.விவேகாநந்தா தெரிவித்துள்ளார்.
தைப்பூசம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு போலிசார் அறிவுறுத்தி இருப்பதாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. பால்குடம், காவடி, மொட்டை போடுதல், ரத ஊர்வலம், அன்னதானம், அங்கப்பிரதட்சணம் என எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதுடன் கோயிலுக்கு அருகில் எந்தக் கடையும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சிறிய அளவில் தைப்பூச வழிபாடுகள் மட்டும் இடம்பெறும் என்றும் கடந்த வாரம் திரு விவேகாநந்தா தெரிவித்திருந்த வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்
இதற்கிடையே, மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது, பொதுப் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.
"பெரும்பாலானோர் தங்களின் அன்றாட தேவைகளுக்குப் பொதுப் போக்குவரத்தையே நம்பியிருப்பதால், அவர்களுக்காகப் பொதுப் போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல் தொடரும்," என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அதனால் கூட்ட நெரிசல் இல்லை என்றும் அவர் சொன்னார்.
அதோடு முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றைப்
பயணிகள் சரியாக பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஈப்போ முதியோர் இல்லத்தில் கிருமித்தொற்று
இதற்கிடையே, ஈப்போவில் உள்ள அன்னிங் ஓல்ட் ஃபோல்க்ஸ் முதியோர் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த ஏழு முதியோர்கள், ஆறு ஊழியர்கள் என 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
36 மூத்தோர், 20 ஊழியர்களைக் கொண்ட இந்த பராமரிப்பு இல்லம் வரும் 20ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

