கொரோனா கிருமியைத் துடைத்தொழிக்கும் நோக்கில் உலகின் பெரும்பாலான பகுதிகள், தங்களின் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில், கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் சுற்றுப்பயணிகளுக்குத் தன் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது துபாய்.
தனிமை உத்தரவை நிறைவேற்றத் தேவையில்லை என்றாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன.
கொள்ளைநோய் வந்து தாக்குவதற்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் இப்போது 'எமிரேட்ஸ்' விமான நிறுவனம், அதன் பலத்தில் 75 விழுக்காட்டை இயக்கி வருகிறது. மேலும், உலகின் மிகப் பெரிய வர்த்தக விமானமான அதன் பிரம்மாண்ட 'ஏ380' விமானங்களையும் பறக்கவிடுகிறது எமிரேட்ஸ். இவற்றின் மூலம் பிரிட்டிஷ், ரஷ்ய சுற்றுப்பயணிகள் துபாய்க்கு வருகின்றனர்.
கிட்டத்தட்ட பத்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள துபாயில், தினமும் குறைந்தது 3,000 கிருமித்தொற்று சம்பவங்கள் புதிதாகப் பதிவாகி வருகின்றன. இதுவரை 745 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்தும் உள்ளனர். சொந்த நாட்டில் பரிசோதனை செய்துகொண்டு அதில் கிருமி பாதிப்பு இல்லை என்ற உறுதியுடன், சுற்றுப்பயணிகள் துபாய்க்கு வந்த பின்னரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம். பின்னர், துபாயில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கத் தொடங்கிவிடலாம்.

