தடுப்பூசிகளை விநியோகிப்பதில் சீரற்ற தன்மை; ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள்: WHO கவலை

தடுப்பூசிகளை விநியோகிப்பதில் சீரற்ற தன்மை; ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள்: WHO கவலை

1 mins read
4071fa63-4fba-42b9-b5ad-ddf5361a6357
படம்: ஏஎஃப்பி -

கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிப்பதில் உலகின் பணக்கார நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைசர், மொடா்னா நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும் தடுப்பூசியை பகிர்ந்துகொள்ளும் விதமாக இருதரப்பு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் கவலை தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தடுப்பூசியை அதன் உற்பத்தியாளர்களும் உலக நாடுகளும் நியாயமான வகையில் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

49 பணக்கார நாடுகளுக்கு 39 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் சென்றடைந்துள்ள நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் வெறும் 25 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டினார்.

எச்1என்1 மற்றும் எய்ட்ஸ் நோய்கள் பரவியபோது செய்யப்பட்ட அதே தவறுகளை இத்தகைய விநியோக சிக்கல்கள் மீண்டும் செய்வதாகவும் இவ்வித நடவடிக்கைகள் நோய்ப் பரவலை மேலும் அதிகப்படுத்தும் எனவும் டாக்டர் டெட்ரோஸ் எச்சரித்தார்.

கடந்த ஆண்டு தடுப்பூசி விநியோகத்திற்காக 44 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் இவ்வாண்டு இதுவரை 12 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்