கெடா மாநிலத்தில் தைப்பூச சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்பட்டதற்கு பலதரப்பில் இருந்தும் அதிருப்தி கிளம்பி உள்ளது.
அந்த மாநிலத்தில் பாஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இனி எப்போதும் அங்கு தைப்பூச விடுமுறை இருக்காது என்று பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்து உள்ளார். வரும் 28ஆம் ேததி கொண்டாடப்பட இருக்கும் தைப்பூசத் திருவிழாவையொட்டி மலேசியாவின் பல மாநிலங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
குறிப்பாக, கெடா மாநிலத்தில் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக 2013ஆம் ஆண்டு முதல் அங்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக திரு ராமசாமி குறிப்பிட்டார்.
"கெடாவில் எத்தனையோ போராட்டங்களுக்குப் பின்னர் பெறப்பட்ட தைப்பூச சிறப்பு விடுமுறை ரத்து செய்யும் அறிவிப்பானது கண்டனத்துக்குரியது," என மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) தேசிய தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தைப்பூச சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்துவதாக மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறியுள்ளார். தைப்பூச வழிபாடுகளை இவ்வாண்டு வீட்டிலேயே மேற்கொள்ள இந்தியர்கள் தயாராகியுள்ளதால் விடுமுறை அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய சீனர் சங்கமும் கெடா மாநில முடிவை எதிர்த்துள்ளது. இவ்வாறு செய்திருப்பது சிறுபான்மை மக்களின் உரிமைகளை அவமதிப்பதாகும் என்று அதன் துணைத் தலைவர் டான் டெய்க் செங் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார். தைப்பூச பொது
விடுமுறையை ரத்து செய்ய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைக் காரணம் காட்டுவது நியாயமற்ற செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தைப்பூச விழா ரத்து என்பதற்கும் பொது விடுமுறை ரத்து என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை உணர மாநில அரசாங்கம் தவறிவிட்டதாக திரு டான் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த எதிர்ப்புகளுக்கு கெடா மாநில முதலமைச்சர் முகம்மது சனுசி தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டு உள்ளது. பொது சுகாதாரப் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளதை எதிர்த்தரப்பினர் புரிந்துகொள்ளவில்லை என திரு சனுசியின் அரசியல் செயலாளர் அஃப்னான் ஹமிமி தைப் தெரிவித்து உள்ளார்.
கெடா மாநிலத்தைக் கேள்வி கேட்கும் கட்சிகள் தைப்பூசத்திற்கு இதுவரை பொதுவிடுமுறை அறிவிக்காத ஏழு மாநிலங்களை ஏன் குறைகூறவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பாகாங், பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, மலாக்கா, சாபா, சரவாக் என தைப்பூச விடுமுறை இல்லாத மாநிலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
"கெடா மாநில அரசாங்கம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தவில்லை. சிறப்பு பொது விடுமுறை என்பது வரையறைக்கு உட்பட்டது. கெடா ஆட்சிமன்றக் குழுவின் முடிவைப் பொறுத்து அந்த விடுமுறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
"சுகாதார விதிமுறைகள் நடப்பில் இருந்தாலும் கோயில்களுக்குச் செல்ல மாநிலத்திலுள்ள 6.8 விழுக்காட்டு இந்துக்களுக்குத் தடை இல்லை," என்று திரு அஃப்னான் கூறியுள்ளார்.

