அண்மைய அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டோனல்ட் டிரம்ப் தோல்வியுற்றதை அடுத்து அந்நாட்டின் வலதுசாரியினர் தங்களது கடும் அதிருப்தியையும் சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர் . ஜனவரி 6ஆம் தேதியன்று திரு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நிறைந்த கும்பல் ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அமளி ஏற்படுத்தியபோதும் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஜனவரி 20ஆம் தேதியன்று திரு பைடன் அதிபர் பதவியை ஏற்றார்.
'கியூஎனொன்' என்ற வலதுசாரி இயக்கத்தினர், திரு பைடனின் நிர்வாகத்தால் அமெரிக்காவில் அழிவும் கேடும் ஏற்படும் எனக் கூறி வருகின்றனர். தீவிர தேசியவாதிகள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் 'பிரவுட் பாய்ஸ்' இயக்கம், 'ஓத் கீப்பர்ஸ்' என்ற ஆயுதம் தாங்கிய குழு, வெள்ளை இனவாதக் குழுக்கள் என பலர், நழுவிப் போன தங்களது கனவுகளுக்காக வருந்தி அடுத்த வாய்ப்பு எப்போது வருமோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளியல் நலிவடைந்ததற்கு வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததே காரணம் என்றும் வெளிநாட்டினர் அனைவரும் அவரவர் நாட்டுக்குத் திரும்புவதே அமெரிக்கர்களுக்கு நல்லது என்பதே இவர்களது கொள்கை. வழக்கமாக தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்தவர்கள் கடந்த தேர்தலில் திரு டிரம்ப்புக்கு வாக்களித்தனர்.
திரு டிரம்ப்பின் வெளியேற்றம் இவர்களுக்கு பேரிடியாக விழுந்தபோதும் இவர்கள் எங்கும் போகப்போவதில்லை என்கின்றனர். அமெரிக்க உள்நாட்டு பயங்கரவாத நிபுணர்கள், திரு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள் மேலும் ஆபத்தான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று கூறினர்.
வன்முறையைத் திரு டிரம்ப் கண்டித்துள்ளபோதும் அவரது பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக பலர் குறைகூறியுள்ளனர்.

