மலேசியப் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார் அன்வார்

மலேசியப் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார் அன்வார்

2 mins read
25eb063f-026e-4f6e-8f90-092b76fb74a8
மலேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும் பிரதமர் முகைதீன் யாசினுக்கு (வலது) எதிராகவும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் (இடது) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். படங்கள்: ராய்ட்டர்ஸ் -

மலேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும் பிரதமர் முகைதீன் யாசினுக்கு எதிராகவும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.

நாட்டில் அவசரநிலை நடப்பில் இருக்கும்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி மாமன்னருக்கு பிரதமர் முகைதீன் ஆலோசனை அளித்தது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று திரு அன்வார் தமது மனுவில் கோரியுள்ளார்.

நீதித்துறை மறுஆய்வு கோரும் அம்மனு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக ஜனநாயகச் செயல் கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவரும் வழக்கறிஞருமான ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார்.

"அந்த மனு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்படவில்லை. ஆனால், அவசரநிலை நடப்பிலிருக்கும்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மாமன்னருக்கு பிரதமர் ஆலோசனை அளித்தது சட்டத்திற்கு எதிரானது என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது," என்று திரு ராம்கர்ப்பால் சிங் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அம்மனுவை உயர் நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவில் கொவிட்-19 தொற்றால் இதுவரை ஏறக்குறைய 700 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, அந்நோய்ப் பரவலுக்கு எதிரான போராட்டத்தை முடுக்கிவிடும் விதமாக மலேசியாவில் இம்மாதம் 12ஆம் தேதி அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகப் பத்து நாள்களுக்குமுன் திரு அன்வார் கூறியிருந்தார்.

திரு முகைதீனின் பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மலேசியாவில் 3,585 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது; 11 பேர் உயிரிழந்தனர். அங்கு இதுவரை 190,434 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 700 ஆகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்