அமெரிக்காவில் கொவிட்-19 நிலவரம் மேம்படும் என அதிகாரிகள் நம்பிக்கை

அமெரிக்காவில் கொவிட்-19 நிலவரம் மேம்படும் என அதிகாரிகள் நம்பிக்கை

1 mins read
d44960e5-c971-48ee-a607-8b0809e7e1fe
-

அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கடுமையான கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த சில மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளன.

அமெரிக்காவில் மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் வேளையில், மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மெதுவாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"இருண்ட சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சம் தெரியத் தொடங்கிவிட்டது. நாம் மெதுவாகச் சென்றாலும் சரியான பாதையில் செல்கிறோம் என நம்புகிறேன்," என்று நியூஜெர்சி ஆளுநர் ஃபில் மர்ஃபி சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் நேற்று கூறினார்.

கொவிட்-19 தொற்றால் கடந்த செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 4,300 அமெரிக்கர்கள் உயிரிழந்துவிட்டனர். பிரேசில், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருவெடுத்துள்ள புதுவகை கொரோனா கிருமி அமெரிக்காவிலும் வேகமாகப் பரவக்கூடும் என்ற கவலையும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை இம்மாதம் 6ஆம் தேதிக்குப் பிறகு 17.7 விழுக்காடு குறைந்து 108,709 ஆனதாக ராய்ட்டர்ஸ் கணக்கெடுப்பு காட்டுகிறது