கிருமிப் பரவலுக்கு மத்தியில் சுவீடனில் கோட்பர்க் திரைப்பட விழா வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.
தனிமைப்படுத்தல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஒரேயொருவருக்கு மட்டும் 60 படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளது ஏற்பாட்டுக் குழு. அதாவது தொலைபேசி, கணினி, புத்தகங்கள் அல்லது வேறு எந்த பொழுதுபோக்குமோ இல்லாமல் ஒரு வார காலத்திற்கு ஒருவர் மட்டும் தனியாக இருந்து திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம்.
ஹம்னெஸ்கர் என்ற தனித்தீவில் உள்ள பாட்டர் நோஸ்டர் கலங்கரை விளக்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திரைப்பட விழாவில் கலந்துகொள் விண்ணப்பம் செய்திருந்த சுமார் 12,000 பேரில் நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளைக் கடந்து வெற்றி பெற்றார் லிசா என்ரோத் எனும் தாதி. கொவிட்-19 மருத்துவப் பிரிவில் பணிபுரிந்த என்ரோத், சனிக்கிழமையன்று படகு மூலம் தனித்தீவைச் சென்றடைந்தார்.
காற்று, கடலுக்கு மத்தியில், திரைப்படங்களைப் பார்ப்பது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார் தீவிர திரைப்பட ரசிகையான அவர்.

