முதன் முதலில் கொவிட்-19 கிருமித் தொற்றுக் குழுமம் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் சந்தைக்கு உலக சுகாதார நிறுவனக் குழுவினர் சென்றனர்.
கொவிட்-19 கிருமி விலங்குகளிடம் இருந்து எவ்வாறு மனிதனுக்குப் பரவியது என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள சீனா சென்றுள்ள இந்த நிபுணர் குழு, வூஹான் நகரிலுள்ள அந்த மிகப் பெரிய விலங்கு சந்தையில் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான சீன அதிகாரிகளும் உடன் சென்றனர்.
சீனாவில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி தராமல் சீனா இழுத்தடித்ததால் இக்குழுவின் பணி தாமதமாகியது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் கடும் அதிருப்தி தெரிவித்த பிறகே, இக்குழுவுக்குச் சீனா அனுமதி அளித்தது. சீனா சென்ற வல்லுநர் குழு தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்து வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதலில் கொவிட்-19 கிருமி கண்டறியப்பட்டது.
ஆய்வுப் பணியின் தொடக்கநிலையிலேயே, உலகெங்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றதுடன் உலகப் பொருளியலையும் பேரழிவிற்கு உட்படுத்திய கிருமியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியம் குறைவு என்று ஆய்வுக்குழுவினர் கூறியுள்ளனர்.
குழு உறுப்பினர்கள் தங்கள் சீன புரவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வருகைகளுக்கு மட்டுப்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக சமூக உறுப்பினர்களுடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக் கிழமை கூறியது.
"கொவிட்-19 தொற்றுநோய் குறித்து புரிந்துகொள்வது குழுவுக்கு மிக முக்கியமானதும் மிக அத்தியாவசியமான தகவலும் ஆகும் என்று குழு உறுப்பினர் பீட்டர் தாஸ்ஸாக் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.
வல்லுநர்கள் செய்தியாளர்க ளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வில்லை. சந்தை உயரமான தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. செய்தி யாளர்களை வெளியேறும்படி கூறிய பாதுகாப்பு அதிகாரிகள், ஏணி மீது ஏறி படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரரின் ஏணியை உலுக்கினர். ஒரு மணி நேர கள ஆய்வுக்குப் பின்னர் வல்லுநர்கள் வாகனத்தில் கிளம்பிச் சென்றனர் என்று செய்திகள் தெரிவித்தன.

