சிறுமியின் கைகளில் விலங்கிட்டு, மிளகுப்பொடி தூவிய காவல் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

சிறுமியின் கைகளில் விலங்கிட்டு, மிளகுப்பொடி தூவிய காவல் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

2 mins read
aa21ba6f-db7f-4d90-a4b0-087fbccc8fd1
அமெரிக்காவின் ரோச்செஸ்டர் நகரில் 9 வயது சிறுமிக்கு விலங்கிட்டு, அவர் மீது மிளகுப்பொடி தூவிய போலிஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவின் ரோச்செஸ்டர் நகரில் 9 வயது சிறுமிக்கு விலங்கிட்டு, அவர் மீது மிளகுப்பொடி தூவிய போலிஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நகர மேயர் லவ்லி வாரனின் கோரிக்கைக்கு இணங்கி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றிய தகவல் இல்லை.

ரோச்செஸ்டர் நகர போலிசார் விசாரணையை முடிக்கும் வரையிலாவது இந்த பணிநீக்கம் நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 7 போலிசார் ஈடுபட்டிருந்தது ஞாயிற்றுக்கிழமை வெளியான காணொளிப் பதிவில் தெரியவந்தது. அதனையடுத்து, அந்நகர பொதுமக்கள் மிகுந்த ஆத்திரம் கொண்டனர்.

பெயர் குறிப்பிடப்படாத அந்தச் சிறுமி கடுமையான மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தன்னுடைய தாயாரைக் கொன்று தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள இருப்பதாக அந்தச் சிறுமி மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் சிறுமியின் கைகளில் விலங்கிட்டு காருக்குள் ஏற்ற முயற்சி செய்ததாகவும் அதற்கு அந்தச் சிறுமி மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவர் மீது மிளகுப்பொடியைத் 'ஸ்பிரே' செய்ததாகவும் கூறப்பட்டது. இந்தக் காட்சிகள், போலிசார் உடலில் அணிந்திருந்த கேமராக்களில் பதிவாகியிருந்தன.

ஆனால், சிறுமியின் பாதுகாப்புக் கருதியே அத்தகைய நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டதாக ரோச்செஸ்டர் போலிஸ் கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.

முதலில் சிறுமிக்கு உதவ அதிகாரிகள் முனைவதும் சிறுமியின் தாயார் அங்கு வந்ததும் தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் பெருகுவதும் பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலிசார் முற்படுவதும் காணொளியில் தெரிகிறது.

போலிசாரின் செயல்பாடுகளுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியைப் பார்த்து போலிசார், "நீ சிறுமியைப்போல செயல்படுகிறாய்," என்று கூறுவதும் அதற்கு அந்தச் சிறுமி, "நான் ஒரு சிறுமிதான்," என்று கூறுவதையும்கூட காணொளி காட்டியது.

நகரின் சட்ட ஒழுங்கு நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக திருவாட்டி வாரன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்