ஜோகூர் பாருவின் ஸ்கூடாயில் அமைந்துள்ள ஒற்றை தாய்மார்கள் வசிக்கும் காப்பகம் ஒன்றில், பிறந்து 10 நாட்களே ஆன கைக்குழந்தை உட்பட 22 குழந்தைகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 15 முதல் 32 வயதுக்குட்பட்ட தாயார்கள் 37 பேருக்கும் தொற்று உறுதியானது.
இது மிகவும் மோசமான நிலை என்று குறிப்பிட்ட பைடஸ் சோலெஹா எனும் அந்த காப்பகத்தின் நிர்வாகி முனா லிஸா இஸ்மாயில் குறிப்பிட்டார்.
திருவாட்டி முனா, அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமையல்காரர், விடுதிக் காப்பாளர் உட்பட அந்த காப்பகத்தைச் சேர்ந்த 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காப்பகவாசி ஒருவர் உடல் நலமின்றி ஜனவரி 28 அன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொண்டு பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே அங்கு பதிவான முதல் சம்பவம்.
கடந்த ஆண்டு முதல் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மலேசியாவில் நடப்புக்கு வந்த போதிருந்தே கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காப்பகத்தில் பின்பற்றப்படுவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி முனா, எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்றார்.
பார்வையாளர்களும் நன்கொடையாளர்களும் காப்பகத்துக்குள் செல்லவோ காப்பகவாசிகள் வெளியில் செல்லவோ அனுமதி இல்லை. காப்பகத்துக்குள்ளும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசங்கள் அணிதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
கர்ப்பிணிகளாக இருக்கும் காப்பகவாசிகள்தான் பெரும்பாலும் மருத்துவ கண்காணிப்புக்காக மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் செல்வர் என்ற திருவாட்டி முனா, இந்த காப்பகம் எட்டு ஆண்டுகளாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
பைடஸ் சோலெஹா மூன்று காப்பகங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல இயலாத இளம் தாய்மார்கள் வசிக்கின்றனர்.

