ஏற்றுமதி, இறக்குமதி சட்டங்களை மீறியதாக மியன்மார் அரசாங்க முன்னாள் ஆலோசகர் ஆங் சான் சூச்சி மீது அந்நாட்டு ராணுவ அரசாங்கம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி வரை திருவாட்டி சூச்சி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது இல்லத்தில் ராணுவம் அதிரடிச் சோதனை நடத்தியது. அப்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்து அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட கையடக்க வானொலிகளை அது கண்டுபிடித்தது. திருவாட்டி சூச்சி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தேசிய பேரிடர் நிர்வாகச் சட்டத்தை மீறியதாக அந்நாட்டு அதிபர் வின் மியின்ட் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. மியன்மார் கடந்த திங்கள் கிழமை ராணுவ ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், மியன்மாரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து அங்குள்ள பல அரசு மருத்துவமனைகளில் ஏராளமான மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மற்ற சிலர் சிவப்பு நாடாக்களை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

