வெலிங்டன்: சமூகத்தில் புதிதாக ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு இருப்பது குறித்து புலன்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நியூசிலாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நார்த் ஐலண்ட் பகுதியில் உள்ள ஹேமில்டன் நகரில் தனது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்ட ஆடவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இரு வாரம் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 30ஆம் தேதி அவர் வெளியில் வந்தார். முன்னதாக, அவரிடம் இருமுறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என இருமுறையும் அறிவிக்கப்பட்டது.
இரு வாரங்களில் இது நான்காவது சமூகத்தொற்று. நிலைமை குறித்து பொதுமக்களுக்கு விளக்கிய பொத சுகாதாரத் துறை இயக்குநர் கரோலின் மெக்எல்னய், "பொது சுகாதார அபாயம் இன்னும் குறைந்த அளவிலேயே இருப்பதால் ஹேமில்டன் நகரைச் சுற்றி வசிப்பவர்கள் பீதியடையத் தேவை இல்லை.
"மிகவும் எச்சரிக்கையுடன் நிலைமையைக் கையாள்கிறோம். இருந்தபோதிலும் கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் பரிந்துரைக்கவில்லை. அதேபோல எந்தவொரு நிகழ்வையும் ரத்து செய்யச் சொல்லவில்லை," என்றார்.
ஆக்லந்தில் உள்ள புல்மேன் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றியவர்கள் மேலும் ஐந்து நாட்கள் தங்களது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
புதிதாக சமூகத்தில் தொற்றியிருக்கும் கிருமி தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை கொவிட்-19 கிருமியா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
ஏற்கெனவே அந்த ஹோட்டல் தொடர்புடைய மூன்று சம்பவங்களில் அந்தப் புதிய வகைத் தொற்று உணரப்பட்டது. பல மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் தொற்றிய முதல் சம்பவம் அது.
உலக நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பல்லாயிரக்கணக்கில் பதிவாகி வந்தபோதிலம் நியூசிலாந்தில் இதுவரை உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் 1,959.
இந்த அளவுக்குக் குறைவாக இருந்தபோதிலும் புதிய வகைக் கிருமியால் சமூகத்தில் உள்ளோர் பாதிக்கப்படுவார்களோ என்ற கவலை நியூசிலாந்தில் எழுந்துள்ளது.

