மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் அண்மையில் கவிழ்த்தது.
மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி உட்பட மற்ற அரசியல் தலைவர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மியன்மார் மக்களும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
மியன்மார் தலைநகர் நேப்பிடாவில் கடந்த மூன்று நாட்களாக ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்தது. மியன்மாரெங்கும் உள்ள பல நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ராணுவத்துக்கு எதிராக முழக்கமிட்டு பேரணி நடத்தினர்.
தலைநகர் நேப்பிடோவில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க மியன்மார் போலிசார் தண்ணீர் பீய்ச்சியதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த புகைப்படச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் இருவர் காயமுற்றதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் புகைப்படச் செய்தியாளர் கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீரை போலிசார் பீய்ச்சியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த இருவர் மயங்கி விழுந்ததாக நம்பப்படுகிறது.
மியன்மாரின் ஆகப் பெரிய நகரமான யங்கூனில் புத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பேரணி நடத்திய ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் அவர்களும் சேர்ந்துகொண்டனர்.
யங்கூனில் உள்ள பூங்கா ஒன்றில் 1,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று காலை கூடினர்.
பௌத்த சமயக் கொடிகளுடன் திருவாட்டி சூச்சியின் தேசிய ஜனநாயக இயக்கக் கட்சியின் சிவப்பு நிறக் கொடிகளும் அங்கு பறக்கவிடப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
"எங்கள் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். எங்கள் வாக்களிப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்கமாட்டோம்," என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன.
ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் பதாகைகள் வைக்கப்பட்டன. ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தனர்.
யங்கூனில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பவும் ராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் அவர்கள் மற்ற துறைகளில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆர்ப்பாட்டங்களின் இலக்கு என்றும் தங்கள் உரிமைகளுக்காகவும் எதிர்காலத்துக்காகவும் போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதிகள் கூறினர்.
"இன்று வேலை நாள். ஆனால் சம்பளம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் வேலைக்குப் போகவில்லை," என்று ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஜவுளி ஆலை ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டில் புத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற காவிப் புரட்சிக்குப் பிறகு நேற்று முன்தினத்திலிருந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களே ஆகப் பெரியவை.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி சக ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொள்ளும் வகையில் சமூக ஆர்வலர்கள் சிலர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
சமூக ஊடக இணைப்பை முடக்க மியன்மார் ராணுவம் முயன்று வருவதால் விபிஎன் கட்டமைப்புகளை சமூக ஆர்வலர்கள் பயன்படுத்துகின்றனர்.
மியன்மார் மக்களிடமிருந்து கிளம்பியிருக்கும் இந்த அதிருப்தி அலை குறித்து அந்நாட்டு ராணுவத் தலைவர்களின் கருத்தைக் கேட்க ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முயன்றது.
ஆனால் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அதன் செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டங்கள் பற்றி மியன்மார் தொலைக்காட்சியில் எந்த ஒரு செய்தியும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

