பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியின் யங்கூன் தலைமை அலுவலகத்தில் மியன்மார் ராணுவம் செவ்வாய் இரவு புகுந்து சோதனை நடத்தி உள்ளது. இரவு 9.30 மணி அளவில் தங்களது தலைமை அலுவலகத்தில் ராணுவம் சோதனை நடத்தியதாக என்எல்டி எனப்படும் தேசிய ஜனநாயக இயக்கக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இருப்பினும் மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.
பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய வேளையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் ரப்பர் தோட்டாக்களால் வான் நோக்கி சுட்டும் போலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
தொடர்ந்து நேற்றும் 5வது நாளாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆங்காங்கே வீதிகளில் திரண்டு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். மியன்மாரின் நவீன தலைநகர் நேபிடோவில் நூற்றுக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் மக்களின் ஒத்துழையாமை இயக்கப் பிரசாரத்திற்கு ஆதரவளித்து ஊர்வலமாகச் சென்றனர்.
மருத்துவர்கள், ஆசிரியர்கள், ரயில்வே ஊழியர்கள் போன்றோர் அந்த ஊர்வலத்தில் காணப்பட்டனர்.
முன்னதாக, நேப்பிடோவிலும் மான்டலே நகரிலும் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் சிலர் காயமடைந்தனர். போலிசாரை நோக்கி கற்களையும் செங்கற்களையும் வீசியோரை போலிசார் திருப்பித் தாக்கியபோது அவர்கள் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செயலை அமெரிக்காவும் ஐநா அமைப்பும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
“அமைதியாக ஒன்றுகூட மியன்மார் மக்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் மீது கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது,”என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நெட் பிரைஸ் செய்தி யாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, பெண் ஒருவர் உண்மையான தோட்டாவால் சுடப்பட்டதாக நேப்பிடோ மருத்துவ
மனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியிடம் கூறினார். தலையில் சுடப்பட்ட அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றை ராய்ட்டர்ஸ் சரிபார்த்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து அந்தப் பெண் நிற்பதும் கலவரத் தடுப்புப் போலிசார் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதும் துப்பாக்கியால் சுடும் சத்தமும் அந்த காணொளியில் பதிவாகி இருந்தது.
தலைக்கவசம் அணிந்திருந்த அந்தப் பெண் திடீரென நிலைகுலைந்து கீேழ விழுந்தார். அவரது தலைக் கவசத்தில் காணப்பட்ட துவாரம் துப்பாக்கி தோட்டா துளைத்ததாகக் கருதப்படுகிறது.