மியன்மாரில் அரசாங்கத்தைக் கவிழ்த்த ராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன. அரசாங்க ஆலோசக ரான ஆங் சான் சூச்சியை கைது செய்து அவரது இருப்பிடம் தெரியாமல் ராணுவம் மறைத்து வைத்துள்ளது. இதனால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தி வருகிறது.
பத்து ஆண்டுகள் நீடித்த ஜனநாயக ஆட்சியை ராணுவம் கடந்த வாரம் கவிழ்த்தது. முக்கிய அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து ஆவேசமடைந்த மியன்மார் மக்கள் தெருக்களில் கூடி ஆங் சாங் சூச்சியை விடுவிக்கக் கோரும் வாசகங்களுடன் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவது பொய் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். நேற்றும் நேப்பிடாவ் சாலைகளிலும் முக்கிய பகுதிகளிலும் திரண்ட ஆயிரக்கணக் கானவர்கள் 'இரவில் கடத்தும் வேலையை நிறுத்து' என்று குரல் கொடுத்துள்ளனர்.
இரவு ஊரடங்கு உத்தரவையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மதிக்க வில்லை. அரசாங்க ஊழியர்களும் மருத்துவர்களும் ராணுவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரு வதால் அவர்களையும் கைது செய்ய ராணுவம் திட்டமிட்டு வருகிறது.
இதற்கிடையே பாத் தேய்ன் நகரில் உள்ளூர் மருத்துவர் ஒருவரை ராணுவத்தினர் அழைத்துச் செல்வதாக தகவல் பரவியதால் பதற்றம் அதிகரித்தது. அவரைக் காப்பாற்ற ஒரு கும்பல் மருத்துவமனையை முற்றுகையிட்டது. ஆனால் தனக்கு எதுவும் நேரவில்லை என்று கூறிய மருத்துவரான தான் மின் டுட், உதவி தேவைப்பட்டால் அழைப்பதாகக் கூறி அந்த கும்பலை அனுப்பி வைத்தார். கடந்த வாரம் ஆட்சி கவிழ்க்கப் பட்டதிலிருந்து ஏறக்குறைய 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

