நாட்டின் பொருளியல் மீட்சிபெற, இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ள தடுப்பூசி திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை எனவும் ஆயிரக்கணக்கானோருக்கு பரிசோதித்துப் பார்த்த பிறகே அவற்றின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மறைமுக நோக்கத்துடனான கருத்துகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்றார்.
அறிவியல் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் எனவும் சில சமூக ஊடக குறுஞ்செய்திகளில் பரப்பப்படுவதுபோல ஆபத்தான எதுவும் தடுப்பூசிகளில் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியுள்ள நாடுகளின் பொருளியலில் நேர்மறையான மாற்றங்கள் தென்படுவதாகவும் மலேசியாவில் கிருமித்தொற்று குறைந்தால், கூடுதல் கட்டுப்பாடுகளின்றி அதிக பொருளியல் மற்றும் சமுதாய நட்வடிக்கைகள் அனுமதிக்கப்படலாம் என்றார் அவர்.

