யங்கூன்: மியன்மாரில் நடைபெறும் ராணுவ ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகளை முறியடிக்க மியன்மார் ராணுவம் கடுமையான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி இரவு முழுவதும் தங்கள் வீட்டில் தங்கும் விருந்தினர்
களின் பெயர்களை அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு உடன்படாதவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
நீதிமன்ற அனுமதியின்றி ராணுவ வீரர்கள் வீடுகளுக்குள் சென்று தேடலாம் அல்லது சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த பலரைக் கைது செய்ய மியன்மார் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ ஆட்சியையும் அடக்குமுறையையும் எதிர்த்து மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மியன்மார் ராணுவத் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா சில தடைகளை விதித்துள்ளது.
நேற்று முன்தினம் மியன்மாரின் ஆகப் பெரிய நகரான யங்கூன், தலைநகர் நேப்பிடாவ் உட்பட பல நகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, மியன்மார் ராணுவத்தை சமூக ஊடகம் வாயிலாக கடுமையாக விமர்சித்த ஏழு பிரபலங்களைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது ஆணை பிறப்பிக்கப்பட்டோரைக் காப்பாற்றும் நோக்கில் அவர்களுக்கு அடைக்கலம் தருபவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு தணியவில்லை. ராணுவ வீரர்கள், போலிசார் ஆகியோரிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் மியன்மார் மக்கள் சுற்றுக்காவல் குழுக்களை அமைத்துள்ளனர்.

