மியன்மாரில் பதற்றம் அதிகரிப்பு

மியன்மாரில் பதற்றம் அதிகரிப்பு

2 mins read
80b68521-51f4-4bc2-91f1-2ef7e1e78bb4
மியன்மாரின் யங்கூன் நகரில் உள்ள மத்திய வங்கிக்கு வெளியே நேற்று திரண்ட போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தனர். படம்: இபிஏ -

யங்கூன்: மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி நாளை வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பார் என்று தலைநகர் நேப்பிடாவில் உள்ள நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தனர். அவர் நேற்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நீதிமன்றத்தின் முடிவு நியாயமற்றது என்று திருவாட்டி சூச்சியின் வழக்கறிஞர்கள் கூறினர். திருவாட்டி சூச்சியிடம் இணையக் காணொளி மூலம் நீதிபதி பேசியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞரை நியமிக்க முடியுமா என நீதிபதியிடம் திருவாட்டி சூச்சி கேட்டதாக அறியப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவாட்டி சூச்சியின் அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தது. ஆறு அலைபேசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக திருவாட்டி சூச்சி மீது குற்றம் சுமத்தி அவரைத் தடுப்புக் காவலில் வைத்தது. இதற்கிடையே, திருவாட்டி சூச்சி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ராணுவ ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்றும் கூறி மியன்மாரின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளில் கவச வாகனங்களை மியன்மார் ராணுவம் நிறுத்திவைத்துள்ளது. இம்மாதம் 1ஆம் தேதியன்று நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து கடந்த பத்து ஆண்டுகளில் மியன்மார் கண்டிராத பெருமளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகக் கடைசியாக 2011ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இம்முறை பெருமளவில் வன்முறை சம்பவங்கள் நிகழாவிட்டாலும் நேற்று முன்தினம் மியன்மாரின் வடக்குப் பகுதியில் உள்ள மின் ஆலையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது. உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டனவா அல்லது ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டனவா என்று தெரியவில்லை என்று மியன்மார் ஊடகம் தெரிவித்தது. பொதுமக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமின்றி, அரசாங்க ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டமும் ராணுவத்துக்கு நெருக்குதலைத் தந்துள்ளது. ராணுவத்துடன் ஒத்துழைக்கக்கூடாது என்ற இலக்குடன் இவ்வாறு பல தரப்பினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். மத்திய யங்கூனில் நேற்று போலிஸ் லாரிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சியடிக்க பயன்படுத்தப்படும் வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டன. அந்த வட்டாரத்தில்தான் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கி, சீனத் தூதரகம் ஆகியவற்றுக்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று அரசாங்க ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர். இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர்கள் அருகில் கவச வாகனம் ஒன்றும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆறு ராணுவ லாரிகளும் அங்கு வந்தடைந்ததாகவும் அவற்றில் இருந்து ராணுவ வீரர்கள் பலர் இறங்கியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மாரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், மியன்மார் நேரப்படி நேற்று காலை 9 மணி அளவில் இணையச் சேவை திரும்பியதாக நேப்பிடாவில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.