'முதல் தொகுப்பு கொவிட்-19 தடுப்பு மருந்துகள் பிப்ரவரி 21ல் மலேசியா வந்து சேரும்'

'முதல் தொகுப்பு கொவிட்-19 தடுப்பு மருந்துகள் பிப்ரவரி 21ல் மலேசியா வந்து சேரும்'

2 mins read
5163fa3d-4548-4e67-aeb3-c5dab90f4afa
மலேசியாவில் தடுப்பூசி போடும் திட்டம் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல் தொகுப்பு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் இம்மாதம் 21ஆம் தேதி மலேசியாவுக்கு வந்து சேரும் என மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி -

மலேசியாவில் தடுப்பூசி போடும் திட்டம் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல் தொகுப்பு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் இம்மாதம் 21ஆம் தேதி மலேசியாவுக்கு வந்து சேரும் என மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்ட (NIP) வழிகாட்டியை வெளியிட்டபோது பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார். அங்கு வந்து சேரும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்துகளின் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதல் தொகுப்பில், பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்றும் கூறப்பட்டது.

கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் 500,000 பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அவர்களில் 60 விழுக்காட்டினர் மருத்துவப் பணியாளர்கள். நலவாழ்வு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் மற்ற 40%ல் அடங்குவர்.

முதல் தொகுப்பில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் செய்தியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களின் கோரிக்கையையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டதாக அவர் தெரிவித்தார். இவர்கள் பணி நிமித்தம் அதிகமான பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட தடுப்பூசி போடும் பணி ஏப்ரலில் நிறைவடையும் நிலையில், அடுத்த கட்டமாக வரும் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 9.4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதர மருத்துவ நிபுணர்கள், 65 வயதுக்கு உட்பட்டு வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் போன்ற அதிக அபாயமுள்ள குழுவுக்கு இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாண்டு மே முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை 18 வயதுக்குட்பட்ட, மலேசியாவில் வசிக்கும் சுமார் 13.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

அந்த காலகட்டத்துக்குள் 80% மக்களுக்கு தடுப்பூசி போடத் திட்டமிடுகிறது மலேசியா.

முதல் தொகுப்பில் 312,390 டோஸ் தடுப்பூசிகள் மலேசியா வந்து சேரும். மேலும் 12.8 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகள் இவ்வாண்டின் பல்வேறு காலகட்டங்களில் மலேசியாவுக்கு வந்து சேரும். மற்றொரு 19.2 மில்லியன் டோஸ் மருந்துகள் மலேசியாவுக்கு விநியோகிக்கப்படுவதற்கான காலக்கெடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மலேசியாவில் மூன்றில் ஒரு பங்கினர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதாகவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது. அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதனை நிர்வகிப்பதற்கான சிறப்பு திட்டம் வகுக்க மலேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்