மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொவிட்-19 காரணமாக 25 பேர் மாண்டனர். கொரோனா கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறை.
இதுவரை மலேசியாவில் கொரானா கிருமித்தொற்று காரணமாக மொத்தம் 1,030 பேர் மாண்டு விட்டனர்.
மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 274,875ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து 5,320 பேர் குணமடைந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
227 கொவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர்களில் 103 பேருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மலேசியாவில் இருப்பவர்களுக்கு அடுத்த வாரம் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்படமாட்டார்கள் என்று மலேசிய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளின் நம்பிக்கையைப் பெற அரசாங்கம் முயன்று வருவதாகவும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவ அனைத்துலக அமைப்புகளுடன் மிக அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் தடுப்பூசித் திட்டத்துக்குத் தலைமை தாங்கும் அமைச்சரான கைரி ஜமாலுதீன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
மலேசியாவின் 33 மில்லியன் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினருக்குத் தேவையான தடுப்பூசி மருந்தை வாங்கிவிட்டதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மலேசியர்களுக்கு மட்டுமல்லாது, வெளிநாட்டு ஊழியர்கள், அகதிகள் உட்பட நாட்டில் உள்ள அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று மலேசியா கூறியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதை மலேசியா இன்னும் கட்டாயமாக்கவில்லை.
இதற்கிடையே, மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்துக்காக 463 பேரை அந்நாட்டு போலிசார் கைது செய்துள்ளனர். பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, அனுமதி பெறாமல் வேறு நாடுகளுக்குச் சென்றது, முகக்கவசம் அணியாதது, வாடிக்கையாளர் விவரங்களைப் பதிவு செய்யாதது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உணவகங்களில் மேசையின் அளவைப் பொறுத்து ஒரே மேசையில் இரண்டுக்கும் மேற்பட்டோர் அமர்வது அனுமதிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். அதே போல காரின் கொள் அளவைப் பொறுத்து இரண்டுக்கும் மேற்பட்டோர் ஒரே காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றார் அவர். இந்தப் புதிய விதிமுறை இன்றிலிருந்து நடப்புக்கு வருகிறது.
சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநிலங்களுடன் தலைநகர் கோலாலம்பூரிலும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

