மலேசியாவில் மேம்பட்டு வரும் கொவிட்-19 நிலவரம்

மலேசியாவில் மேம்பட்டு வரும் கொவிட்-19 நிலவரம்

2 mins read
2a5ff9c4-0683-4595-890c-f11546bb2ae5
இம்மாதம் 11ஆம் தேதி மலேசியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை ஆக அதிகமாக 51,783 ஆக இருந்தது. படம்: ஏஎஃப்பி -

மலேசியாவில் தொடர்ந்து பத்தாவது நாளாக, கொவிட்-19 நோய்த்தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரைவிட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34,468 ஆக குறைந்துள்ளது.

இம்மாதம் 11ஆம் தேதி அது ஆக அதிகமாக 51,783 ஆக இருந்தது. மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முந்தைய நிலைக்கு இந்த எண்ணிக்கை நெருங்குகிறது. ஜனவரி 12ஆம் தேதி அது 30,390 ஆக இருந்தது.

மலேசியாவில் இன்று (பிப்ரவரி 20) 2,461 பேருக்கு புதிதாக கொவிட்-19 பாதிப்பு உறுதியானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நேற்று அந்த எண்ணிக்கை 2,936 ஆக இருந்தது.

இன்று மேலும் எட்டுப் பேர் தொற்றால் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,051 ஆக உயர்ந்தது.

இன்று புதிதாக 10 நோய்த்தொற்றுக் குழுமங்கள் உருவாகியுள்ளதாகவும் அவை அனைத்தும் வேலையிடம் தொடர்பானவை என்றும் அவர் சொன்னார்.

அவற்றில் 4 குழுமங்கள் ஜோகூரிலும் தலா 2 குழுமங்கள் சிலாங்கூரிலும் பேராக்கிலும் பதிவாகின.

சாபா, நெகிரி செம்பிலானில் தலா ஒரு குழுமம் பதிவானது.

சிலாங்கூரில் ஆக அதிகமாக 1,001 தொற்று சம்பவங்கள் இன்று பதிவாகின.

மலேசியாவுக்கு நாளை முதற்தொகுதி கொவிட்-19 தடுப்பூசிகள் வந்துசேரவுள்ள நிலையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று மலேசிய போலிஸ் தலைவர் அப்துல் ஹமீது படோர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் வந்துசேர்ந்தவுடன் அவற்றை விமான நிலையத்தில் இருந்து சிலாங்கூரின் சுபாங்கில் உள்ள சேமிப்புப் பகுதிக்கு கொண்டுசெல்லும் பணிகளை ஒருங்கிணைக்க போலிஸ் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கப்படும் என்பது குறித்து இதுவரை மிரட்டல் எதுவும் விடுக்கப்படவில்லை என்றாலும் போலிஸ் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என்று திரு படோர் கூறினார்.

ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு மில்லியன் தடுப்பூசிகளை மலேசியா பெறவிருக்கிறது. மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்