ஆஸ்திரேலியா நேற்று தனது தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியது. முதல் தடுப்பூசியை பிரதமர் ஸ்காட் மோரிசன் போட்டுக்கொண்டார். வழக்கநிலைக்கு நாடு திரும்ப தடுப்பூசித் திட்டம் ஒரு மாபெரும் நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஆஸ்திரேலியா கட்டாயமாக்கவில்லை. இருப்பினும் அதனைப் போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னியில் உள்ள மருத்துவ நிலையத்தில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை பிரதமருடன் நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பால் கெல்லியும் போட்டுக்கொண்டார்.
"வழக்கநிலையை நோக்கி நாம் நடை
போடத் தொடங்கும் இன்றைய நாள் மிகவும் அற்புதமான நாள்," என்று திரு மோரிசன் மகிழ்வுடன் வர்ணித்தார்.
ஆஸ்திரேலியா முழுவதும் ஐந்து கட்டங்களாக தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா கிருமி பரவாமல் தடுப்பு நடவடிக்கைக்கு இத்திட்டம் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதை அனைத்து அரசாங்கங்களின் தேசிய அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. அவ்வப்போது மக்கள் நடமாட்டத்தை முடக்குதல், ஊரடங்கை அமல்
படுத்துதல், எல்லைகளை மூடுதல் உள்ளிட்டவை அந்தக் கட்டுப்பாடுகளுள் அடங்கும்.
இரண்டாவது நாளாக நேற்றும் அங்கு சமூக அளவில் தொற்றுச் சம்வங்கள் பதிவாகவில்லை. கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை ஆஸ்திரேலியாவில் 29,000 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று காரணமாக 909 பேர் உயிரிழந்துவிட்டனர்.

