'மலேசியாவிலிருந்து மியன்மாருக்கு 1,200 பேரை நாடுகடத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றம் ஆணை'

2 mins read
04c1f6d6-0df0-40d4-9b67-4b380cdb855e
தடுத்து வைக்கப்பட்ட மியன்மார் மக்களை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் மற்றும் குடிநுழைவுத் துறை டிரக்குகள் மேற்கு மலேசியாவின் லுமுட் துறைமுகத்துக்கு சென்றதைக் காண முடிந்தது. படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

மலேசியாவிலிருந்து இன்று சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்பட இருந்த 1,200 மியன்மார் மக்களை திருப்பி அனுப்புவதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளதாக மனித உரிமைகள் குழுவைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை நாளைக் காலை 10 மணி வரை நடப்பில் இருக்கும். அந்த மியன்மார் மக்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை ரத்து செய்யக்கோரும் மனு நாளைக் காலை விசாரிக்கப்படும் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அண்ட் அசைலம் அக்சஸ் தரப்பு வழக்கறிஞர் நியூ சின் இயூ குறிப்பிட்டார்.

தஞ்சம் புகுந்த மியன்மார் மக்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்காக அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த கப்பல்கள் உள்ள துறைமுகத்துக்கு அவர்கள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

குழந்தைகள் உட்பட 1,200 பேரை இன்று பிற்பகலில், மியன்மார் ராணுவம் அனுப்பி வைத்த மூன்று கடற்படைக் கப்பல்களில் திருப்பி அனுப்ப மலேசியா திட்டமிட்டிருந்தது.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து மியன்மாரில் ராணுவ ஆட்சி நடப்புக்கு வந்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர்.

மியன்மாருக்கு அனுப்ப இருந்தவர்களுள் ரோஹிங்யா முஸ்லிம் இனத்தவரல்லாத சிறுபான்மை இனத்தவரும் மியன்மாரில் அடக்குமுறைக்கு உட்பட்டவர்களும் இருந்ததாகக் கூறப்பட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் (UNHCR) பதிவு செய்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் நாடுகடத்தப்படமாட்டார்கள் என மலேசியா தெரிவித்தது. இருப்பினும் நாடுகடத்தப்ப்ட இருந்தவர்களுள், தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் சிலரும் இருந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பான கேள்விகளுக்கு மலேசியா பொதுவெளியில் பதிலளிக்கவில்லை.

தடுத்து வைக்கப்பட்ட மியன்மார் மக்களை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் மற்றும் குடிநுழைவுத் துறை டிரக்குகள் மேற்கு மலேசியாவின் லுமுட் துறைமுகத்துக்கு சென்றதைக் காண முடிந்தது.

UNHCRல் பதிவு செய்த மூவரும், குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் மலேசியாவில் இருக்கும் 17 பிள்ளைகளும் நாடு கடத்தப்பட இருப்பதைச் சுட்டிக் காட்டி, அவர்களைத் திருப்பி அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அண்ட் அசைலம் அக்சஸ் மனித உரிமை குழுக்கள்.

இந்த நாடுகடத்தும் செயலை மலேசியா கைவிட வேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் UNHCR உரையாட அனுமதிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்