மலேசியப் பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

மலேசியப் பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

2 mins read
7d0ee6c2-170a-44c0-b9a8-44dbf9f67720
மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் சராவாக் மாநிலம் ஜுலாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி செங் (இடது), ஜோகூர் மாநிலம் தெப்ராவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெஃபன் சூங். படம்: தி ஸ்டார் நாளிதழ் -

மலேசியாவின் இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக திரு முகைதீனின் நிலை வலுவடைந்துள்ளது.

பிரதமர் முகைதீனுக்குப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என நிரூபிக்கப் போராடி வரும் எதிர்க்கட்சிகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சராவாக் மாநிலம் ஜுலாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி செங்கும் ஜோகூர் மாநிலம் தெப்ராவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெஃபன் சூங்கும் பிரதமர் முகைதீன் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

கெஅடிலான் கட்சியிலிருந்து அவர்கள் இருவரும் விலகிவிட்டனர். சராவாக் மாநிலத்தின் கெஅடிலான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக திரு செங் நேற்று தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் அஸ்மின் அலி, உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுதீன், வீடமைப்பு அமைச்சர் சுராய்டா கமாருதீன் ஆகியோர் முன்னிலையில் திரு செங்கும் திரு சூங்கும் பிரதமர் முகைதீனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து அதை உறுதி செய்யும் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.

இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 1 மணி அளவில் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

"பிரதமர் முகைதீன் தலைமையின்கீழ் இயங்கும் அரசாங்கத்தின் செயல்பாட்டைப் பார்த்த பிறகு ஆளும் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்க திரு செங்கும் திரு சூங்கும் முடிவு செய்துள்ளனர்.

" மேலும் கெஅடிலான் கட்சி நிர்வகிக்கப்படும் முறை அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் முகைதீனை ஆதரிப்பதன் மூலம் தங்கள் தொகுதி மக்களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்றலாம் என்று இருவரும் நம்புகின்றனர்," என்று பெரிக்காத்தான் நேஷனல் தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்