சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் போராட்டக்காரர்கள் நெருக்குதல்

சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் போராட்டக்காரர்கள் நெருக்குதல்

2 mins read
0031a451-9b2e-4544-b53a-9b65c024760a
-

யங்­கூன்: மியன்­மா­ரில் நாளுக்கு நாள் போராட்­டங்­களும் வன்­மு­றை­யும் அதி­க­ரித்து வரும் நிலை­யில், அங்­குச் செயல்­படும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது நாட்­டை­விட்டு வெளி­யே­றும்­படி போராட்­டக்­கா­ரர்­கள் நெருக்­கு­தல் அளிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் 1ஆம் தேதி மியன்­மார் ராணு­வம், ஜன­நா­யக அர­சைக் கவிழ்த்து, ஆட்சி நிர்­வா­கத்­தைத் தன்வயப்­ப­டுத்­தி­யது. அதனை எதிர்த்து ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் அங்கு தொடர்ந்து போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

போராட்­டங்­களை ஒடுக்க ராணு­வ­மும் போலி­சும் கடு­மை­யாக முயன்று வரு­கின்­றன. போராட்­டக்­கா­ரர்­கள் மீது போலிஸ் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் இது­வரை ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் மாண்­டு­போ­யி­னர்.

மியன்­மார் தொழில்­துறை குறிப்­பி­டத்­தக்க அளவு ராணு­வத்­தின் வச­மி­ருக்­கிறது. 'மியன்­மார் இக்­க­னா­மிக் ஹோல்­டிங்ஸ் லிமி­டெட்', 'மியன்­மார் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு' எனும் தனது இரு குழு­மங்­கள் வாயி­லாக பல்­வேறு துறை­களைச் சேர்ந்த நூற்­றுக்­கும் அதி­க­மான நிறு­வனங்­களை ராணு­வம் தன் கட்­டுப்­பாட்­டில் வைத்­துள்ளதாக 2019 ஐநா அறிக்கை கூறுகிறது.

இந்­நி­லை­யில், அண்­மைய ஆண்­டு­களாக மியன்­மா­ரின் ஆகப் பெரிய வெளி­நாட்டு முத­லீட்­டா­ள­ரா­கச் சிங்­கப்­பூர் விளங்கி வரு­கிறது. கிட்­டத்­தட்ட 50 ஆண்­டு­கால ராணுவ ஆட்சி முடி­விற்கு வந்து, பத்­தாண்­டு­க­ளுக்­கு­முன் அங்கு ஜன­நா­யக ஆட்சி திரும்­பி­யது. அதைத் தொடர்ந்து, அந்­நாட்டை மேம்­ப­டுத்­தும் அனைத்­து­லக முயற்­சி­களில் சிங்­கப்­பூரைத் தள­மா­கக் கொண்ட நிறு­வ­னங்­களும் இணைந்­தன.

கடந்த இரு ஆண்­டு­களில் மட்­டும் சிங்­கப்­பூர் 2.5 பில்­லி­யன் வெள்­ளியை மியன்­மா­ரில் முத­லீடு செய்­துள்­ளது.

மேலை நாடு­கள் பல்­வேறு தடை­களை விதித்து, மியன்­மார் ராணு­வத்­திற்கு நெருக்­கடி கொடுத்து வரு­கின்­றன. இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த சில நிறு­வ­னங்­கள் உட்­பட பல்­வேறு நிறு­வ­னங்­களும் ராணு­வத்­து­டன் கொடுக்­கல் வாங்­கல் வைத்­தி­ருப்­ப­தாக ஜன­நா­யக ஆத­ர­வுப் போராட்­டக்­கா­ரர்­கள் குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து, சமூ­க­ரீ­தி­யி­லான அழுத்­தத்­தை­யும் புறக்­க­ணிப்பு அச்­சு­றுத்­த­லை­யும் அந்­நி­று­வ­னங்­கள் எதிர்­கொண்­டு உள்­ளன.

ஆட்­சிக்­க­விழ்ப்­பிற்கு முன்பிருந்தே, மியன்­மார் ராணு­வத்­துடன் தொடர்பு வைத்­துள்ள நிறு­வ­னங்­களின் பெயர்­கள் அடங்­கிய 'கறுப்­புப் பட்­டி­யலை' சில மனித உரிமை அமைப்­பு­கள் அவ்­வப்­போது வெளி­யிட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், மியன்­மா­ரில் செயல்­படும் இரு­ப­திற்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களை 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' தொடர்­பு­கொண்­டது. அவற்­றில் எட்டு நிறு­வ­னங்­கள் பதி­ல­ளித்­த­தா­க­வும் பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் ராணு­வத்­து­டன் தங்­க­ளுக்­குத் தொடர்­பில்லை என மறுத்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

இருப்­பி­னும், சில நிறு­வ­னங்­கள் தங்­களது வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளைக் குறைத்­துக்­கொண்­டுள்­ளன. அதேவேளை­யில், எல்லா நிறு­வனங்­களும் தங்­க­ளது முத­லீ­டு­களை மீட்­டுக்­கொள்­ள­வில்லை.

இத்­த­கைய சூழ­லில், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் தங்­க­ளது செயல்­பா­டு­களை நிறுத்­திக்­கொண்­டால் மியன்­மார் மக்­களே பாதிக்­கப்­ப­டு­வர் என்று மியன்­மா­ருக்­கான முன்­னாள் ஐநா நிபு­ணர் கிறிஸ் சிடோட்டி தெரி­வித்­தார்.