3 வயது மகளுடன் இருந்தவர் மீது மிளகு தூள் தெளித்த போலிசார்

3 வயது மகளுடன் இருந்தவர் மீது மிளகு தூள் தெளித்த போலிசார்

2 mins read
be549ad9-2cc1-4f74-a9fb-1e8aa9225ae4
-

மூன்று வயது மகளைப் பற்றியுள்ள மாது ஒருவரைத் தரையில் தள்ளியதுடன் அவர் மீது மிளகுத் தூளை போலிசார் தெளித்த சம்பவம் ஒன்று காணொளியாக வெளிவந்துள்ளதை அடுத்து நியூயார்க்கின் ரோச்சஸ்டர் நகரத்து போலிசார் மீண்டும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதே ரோச்சஸ்டர் போலிசார் மிகக் கடுமையாக நடந்துகொண்டுள்ளதாக அண்மைய மாதங்களில் இரு வேறு சம்பவங்கள் காட்டியுள்ளன. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தைக் காட்டும் காணொளி சென்ற வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. காணொளியில் தம் மகளை ஒரு கையில் தூக்கியவாறு நடந்து சென்ற மாது ஒருவரை போலிஸ் அதிகாரி தடுத்து நிறுத்தி, அவர் திருடியதாக அருகிலுள்ள கடை புகார் அளித்திருப்பதாக கூறினார்.

தாம் திருடவில்லை என்று மாது மறுத்ததுடன் அதிகாரியிடம் தமது பணப்பையைச் சிறிது திறந்து காட்டவும் முற்பட்டார். மாது அவ்விடத்தைவிட்டுப் போவதை போலிசார் தொடர்ந்து தடுத்த நிலையில், திடீரென்று கையில் பிள்ளையுடன் இருந்த அந்த மாது திரும்பி ஓட்டம் பிடித்தார்.

அதிகாரிகள் பலர் அவரைத் துரத்தினர். அவரைப் பிடித்துத் தரையில் தள்ளினர். அலறிக்கொண்டிருந்த மகளைப் பிடிப்பதற்காக அந்த மாது மீண்டும் எழ முயற்சி செய்தபோது போலிசார் 'பெப்பர் ஸ்பிரே'யை அவர்மீது அடித்துத் தரையில் தள்ளினர். சம்பவ இடத்தில் இருந்த குழந்தை மீது மிளகு நேரடியாகப் படாவிட்டாலும் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று காணொளியைப் பார்த்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுமக்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ரோச்சஸ்டரின் போலிசார் பொறுப்பேற்பது தொடர்பான வாரியம், வெளியிட்ட இக்காணொளி தங்களை வெகுவாகப் பாதித்துள்ளதாக தெரிவித்தது. முன்னதாக ஒன்பது வயது சிறுமிக்கு விலங்கிட்டு இதேபோல் பெப்பர் ஸ்பிரே அடித்ததைக் குறிப்பிட்ட கழகத் தலைவி ஷனி வில்சன், இரண்டு சம்பவங்களுக்கும் இடையே மக்களுக்குக் கலக்கம் அளிக்கும் வகையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைச் சுட்டினார்.