தமது குழந்தையின் தோல் நிறம் குறித்து பிரிட்டிஷ் அரச குடும்பம் கவலைப்பட்டதாக இளவரசர் ஹேரியின் மனைவி மேகன் ஓப்ரா வின்ஃபிரியிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேகனின் தாயார் கருப்பினத்தைச் சேர்ந்தவர், தந்தை வெள்ளைக்காரர். இதனால் தமக்குப் பிறக்கும் பிள்ளையின் தோல் கருப்பாக இருக்கக்கூடும் என்ற கவலை அரச குடும்பத்துக்கு இருந்ததாக அவர் கூறினார்.
"எனது குழந்தை இளவரசர் அல்லது இளவரசி ஆவதை அவர்கள் விரும்பவில்லை. மேலும் குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட ஹேரி-மேகன் தம்பதியர் தங்கள் அரசப் பொறுப்புகளைத் துறந்தனர். தற்போது அவர்கள் தங்கள் குழந்தையுடன் அமெரிக்காவில் வாழ்கின்றனர்.
இந்நிலையில், தம்முடன் பேசுவதையும் தமது தந்தை இளவரசர் சார்ல்ஸ் நிறுத்திவிட்டதாக இளவரசர் ஹேரி வருத்தத்துடன் தெரிவித்தார். அரச குடும்பத்துடனான வாழ்க்கை தமக்குக் கடுமையான மனவுளைச்சலைத் தந்ததாகவும் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணங்கள் ஏற்பட்டதாகவும் மேகன் தெரிவித்தார்.

