பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய மாணவியிடம் சளிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும், தமக்கு விதிக்கப்பட்ட வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவை 24 வயது எஸ்தர் டான் லிங் யிங் மீறியதாகக் கூறப்படுகிறது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பிறகு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று டான் சிங்கப்பூருக்கு வந்ததாகவும் அவருக்கு 14 நாட்கள் வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அவரும் அவரது பெற்றோரும் சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் உள்ள உணவு நிலையத்தில் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
பிறகு அதே நாளில் டான் கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள மருந்தகத்துக்குச் சென்று மருந்துகள் வாங்கினார். தமது பயண விவரங்கள் குறித்து மருத்துவரிடம் டான் பொய் கூறியதாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் டானுக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

