சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் பத்து பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,062ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பத்து பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
சமூக அளவில் பாதிப்பு இல்லை. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கு விடுதிகளிலும் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.
நேற்று ஆறு பேருக்கு கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
இவர்களில் இந்தியாவிலிருந்து வந்த நீண்டகால குடியுரிமை அட்டை வைத்திருக்கும் ஒருவரும் இந்தோனீசியாவிலிருந்து வந்த வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர்.
பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வந்த வொர்க் பாஸ் ஊழியர்களும் பாதிக்கப்பட்ட ஆறு பேரில் அடங்குவர்.
சிங்கப்பூரில் உள்ள தங்கள் உறவினர்களைக் காண இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இருவருக்கும் கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.

