இந்தோனீசியா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 27 பேர் பலி

இந்தோனீசியா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 27 பேர் பலி

2 mins read
c21eb784-5942-447a-a093-4724efea147b
தலைக்குப்புற விழுந்து நொறுங்கிக் கிடந்த பேருந்திலிருந்து பயணிகளை மீட்கும் பணியில் தேடி, மீட்கும் படையினர் இரவு முழுவதும் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தோனீசியாவில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து, ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட குறைந்தது 27 பேர் மாண்டனர்.

மேற்கு ஜாவா மாநிலத்தின் சுமேடாங் நகருக்கு அருகே நேற்று முன்தினம் இவ்விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தேடி, மீட்கும் படை தெரிவித்தது.

தலைக்குப்புற விழுந்து நொறுங்கிக் கிடந்த பேருந்திலிருந்து பயணிகளை மீட்கும் பணியில் தேடி, மீட்கும் படையினர் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.

அந்தப் பேருந்தில் 66 பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. வெளிச்சம் குறைவாக இருந்த அந்தச் சாலையில் காற்றும் அதிகமாக வீசியதால் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் அது விழுந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

விபத்தில் அப்பேருந்தின் ஓட்டுநரும் உயிரிழந்துவிட்டார்; 39 பேர் காயத்துடன் தப்பினர்.

"இறந்தவர்களில் குழந்தைகளும் பெரியவர்களும் அடங்குவர்," என்று பண்டுங் தேடி, மீட்கும் படைப்பிரிவு அதிகாரி மமாங் ஃபட்மோனோ கூறியதாக 'ஏஎஃப்பி' செய்தி தெரிவித்தது.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர். ஆயினும், அந்தப் பேருந்து சாலையில் செல்லத் தகுந்ததா என்பதற்கான சோதனைகள் புதுப்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது என்று போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

மேற்கு ஜாவாவில் உள்ள ஓர் ஆன்மிகத் தலத்தில் இருந்து சுபாங் நகருக்கு அப்பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.

இந்தோனீசியாவில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. பழைய, சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களும் சாலை விதிமீறல்களுமே அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிற்பகுதியில், சுமத்ரா தீவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர்.