கையை இழந்தாலும் சொந்த காலில் நிற்கும் வியட்னாமிய மாது

கையை இழந்தாலும் சொந்த காலில் நிற்கும் வியட்னாமிய மாது

2 mins read
5a5145ab-6d12-41a2-b824-5dd73f2d4763
தமது ஒரு கையைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தும் பணியை திருமதி லி தி கிம் திராம் மேற்கொள்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

வியட்னாமில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் திருமதி லி தி கிம் திராம் தமது இடது கையை இழக்க நேரிட்டது. அந்த விபத்தில் இவரது கணவர் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் குணமடைந்து வந்த இந்த 42 வயது மாது, தமது வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்கான வழிமுறையைப் பற்றி யோசித்தார். இவரது குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் முடிதிருத்தும் பணியை மேற்கொண்டிருந்தனர்.

எனவே, தமது இரு பிள்ளைகளையும் தாயாரையும் கவனித்துக்கொள்ள திருமதி திராம் சொந்த காலில் நிற்க விரும்பினார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஒரு மாத காலத்தில் முடிதிருத்தும் புதிய வழியை இவர் மேற்கொள்ளத் தொடங்கினார். ஹோ சி மின் நகரத்தில் முடிதிருத்தும் கடையை இவர் நடத்துகிறார்.

"முடிதிருத்தும்போது சீப்பைப் பிடித்திருந்த கையை நான் இழந்துவிட்டேன். எனவே, கத்தரிக்கோல் வைத்திருக்கும் கை முடியைத் திருத்தும் அதேவேளையில் சீப்பைப் பிடித்திருக்க வேறொரு வழியை நான் தேட வேண்டியிருந்தது," என்று திருமதி திராம் சொன்னார்.

தமது வேலையை மீண்டும் கற்கத் தொடங்கிய இவர், தொடக்கத்தில் முடிதிருத்துவதற்கு ஒரு மணி நேரம் வரை எடுப்பார். முன்னதாக இந்தப் பணியை மேற்கொள்ள இவருக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்தன.

வாடிக்கையாளர்களின் முடியைக் கழுவும்போது தமது வாயைக் கொண்டு 'ஷவர் ஹெட்'டைப் பிடித்துக்கொள்வார்.

திருமதி திராம் முதன்முறையாக தமது முடியைத் திருத்தும்போது தமக்கு சற்று பயமாக இருந்ததை அலுவலகப் பணியாளர் நுயென் வான் டிரி ஒப்புக்கொண்டார்.

"எனினும், அவரது கைவண்ணத்தில் எனது தலைமுடி அழகாக திருத்தப்பட்டது. எனவே, அவரது கடைக்கே நான் திருப்பி வருவேன்," என்றார் அவர்.

தமது பயணத்தில் ஏற்கெனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்தாலும் ஒரு நாள் தமக்குச் செயற்கை கை பொருத்தப்படுவதை திருமதி திராம் எதிர்பார்த்திருக்கிறார்.

"பழக்கத்துடன் எந்த ஒரு வேலையையும் ஒரு கையால் நீங்கள் செய்யலாம். ஆனால், இரு கைகளைக் கொண்டு அதே வேலையை நீங்கள் இன்னும் சிறப்பாக செய்யலாம்," என்றார் இவர்.

குறிப்புச் சொற்கள்
விபத்துவியட்னாம்