உலகிற்கு தேவையான ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி மருந்துகள் அமெரிக்காவில் தேங்கிக் கிடக்கின்றன

உலகிற்கு தேவையான ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி மருந்துகள் அமெரிக்காவில் தேங்கிக் கிடக்கின்றன

2 mins read
3c34da7c-f4c8-4e51-9cdb-00130654016d
ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த 70க்கும் அதிகமான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ஆனால், அமெரிக்காவில் இறுதிக்கட்ட பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. படம்: ராய்ட்டர்ஸ் -

மில்லியன் கணக்கானோருக்குப் போடக்கூடிய அளவிலான ஆஸ்ட்ரஸெனிகா கொவிட்-19 தடுப்பூசிகள் அமெரிக்காவின் தயாரிப்பு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு அனுமதித்த பல நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கான இந்தத் தடுப்பூசி மருந்துகள் அனுமதி பெற காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள ஆஸ்ட்ரஸெனிகாவின் வெஸ்ட் செஸ்டெர் வளாகத்தில் கிட்டத்தட்ட 30 மில்லியன் பேருக்கு போடும் அளவிலான தடுப்பூசி மருந்துகள் உள்ளன.

வெள்ளை மாளிகை மற்றும் மத்திய சுகாதார அதிகாரிகளிடையே இதுகுறித்த இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அதிக தேவையுள்ள நாடுகளுக்கு அந்த தடுப்பூசி மருந்தை வழங்க சிலர் ஒப்புக்கொண்டாலும் வேறு சிலர் தயாராக உள்ள மருந்தை கைநழுவவிட விரும்பவில்லை என மூத்த நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தடுப்பூசி தேவையுள்ள வேறு நாடுகளின் அரசாங்கங்கள் அமெரிக்க அரசிடம் அந்த தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஆஸ்ட்ரஸெனிகாவின் பேச்சாளர் கொஸாலோ வினா கூறினார்.

அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள 'எமெர்ஜென்ட் பயோசொல்யூஷன்ஸ்' நிறுவனமும் பால்டிமோரில் மில்லியன் கணக்கிலான பேருக்கு போடக்கூடிய அளவுக்கான ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசியைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த 70க்கும் அதிகமான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ஆனால், அமெரிக்காவில் இறுதிக்கட்ட பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், இந்த மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி உணவு, மருந்து அமைப்புக்கு நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் தயாராக இருக்கும் தடுப்பூசி மருந்துகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கடனாக வழங்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திடம் ஆஸ்ட்ரஸெனிகா கோரியது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அந்த நிறுவனம் வழங்க ஒப்புக்கொண்ட அளவுக்கு தடுப்பூசியை வழங்க இயலாத நிலையில் அங்கு தடுப்பூசி போடும் பணி கடுமையாகத் தடைபட்டுள்ளது.

ஆனால், அந்த கோரிக்கையை திரு பைடனின் நிர்வாகம் நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுப் பரவல் மோசமடைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி வைப்பதன் தொடர்பிலான முடிவை அடுத்த சில வாரங்களுக்குள் எடுக்குக்மாறு மத்திய அதிகாரிகள் வெள்ளை மாளிகையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.