மேலும் எட்டு பேருக்கு கொரோனா

மேலும் எட்டு பேருக்கு கொரோனா

2 mins read

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் எட்டு பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,088ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட எட்டு பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சமூக அளவில் யாருக்கும் பாதிப்பில்லை. வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளிலும் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.

நேற்று சமூக அளவில் பாதிக்கப்பட்டவர் டோய்ஷ் வங்கியில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராவார்.

இம்மாதம் 1ஆம் தேதியன்று அவருக்கு சளிபிடித்துக்கொண்டது. அதே நாளில் அவர் மருத்தவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டார். ஆனால் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அவர் மறுத்துவிட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

அவர் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு ஐந்து நாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது. குணமடையாவிடில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சு கூறியது.

இந்நிலையில், இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த அந்த ஆடவர் கடந்த வியாழக்கிழமையன்று கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது அந்தச் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவர் தேசிய தொற்றுநோய் மையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதியன்று அவர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது அவருக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்படுவோருக்கான இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் அவருக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.