பதவி விலகிய கெஅடிலான் கட்சி துணைத் தலைவர், பிரதமர் முகைதீனுக்கு ஆதரவு

பதவி விலகிய கெஅடிலான் கட்சி துணைத் தலைவர், பிரதமர் முகைதீனுக்கு ஆதரவு

1 mins read
2ab0b155-2df5-4d52-a57c-5b9c2c24558a
கடந்த ஓராண்டில் நிகழ்ந்தவை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக திரு சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். படம்: தி ஸ்டார் நாளிதழ் -

மலேசியாவின் எதிர்க்கட்சியான கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து சேவியர் ஜெயகுமார் இன்று விலகினார். இவருடன் சேர்த்து கடந்த மூன்று வாரங்களில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கெஅடிலானிலிருந்து விலகிய திரு சேவியர், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுக்கும் அவரது பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

திரு சேவியர் 1998ஆம் ஆண்டிலிருந்து கெஅடிலான் கட்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டில் நிகழ்ந்தவை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது கெஅடிலான் கட்சித் தலைமை பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதுகுறித்து திரு சேவியர் அதிருப்தி தெரிவித்தார்.

"கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது கிருமிப் பரவலைத் தடுக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான நிதிகளைப் பெறவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் இதற்கே முன்னுரிமை தர வேண்டும்," என்றார் திரு சேவியர்.