உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது பிரேசில். கிருமிப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறிவரும் லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் வெள்ளிக்கிழமை மட்டும் 2,216 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்தனர். அன்றைய தினம் பதிவான தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 85,663. இதனைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,363,380 ஆகவும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 275,105 ஆகவும் அதிகரித்துவிட்டது.
தொற்றுச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிரேசில் பிடித்துள்ளது.
கடுமையான சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள், தீவிரமான தடுப்பூசி இயக்கம் போன்றவற்றால் உலகக் கிருமிப் பரவல் நிலவரம் அண்மைய வாரங்களாக ஓரளவு தணிந்து வரும் நிலையில் பிரேசிலில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது. ஆண்டிறுதி கொண்டாட்ட ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து அங்கு கிருமிப் பரவல் வேகமெடுத்து வருகிறது. ஏராளமான அளவில் கிருமித்தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் அவர்களைச் சமாளிக்க மருத்துவமனைகள் சிரமப்படுகின்றன. மாநில ஆளுநர்கள் கடுமையான முடக்கத்தை அறிவித்து வருகின்றனர்.

