வெலிங்டன்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஈராண்டுகள் ஆனதைக் குறிக்கும் விதமாக நேற்று நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன், நியூசிலாந்தின் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆதரவளிக்க நாடு கடமைப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 2019 மார்ச் 15ஆம் தேதி ஆயுதமேந்திய துப்பாக்கிக்காரன் ஒருவன் இரு பள்ளிவாசல்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நியூசிலாந்தில் ஆயுதக் கட்டுப்பாடுகளைத் திருமதி ஆர்டர்ன் கடுமையாக்கினார்.
அதோடு, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அதில் உயிர் பிழைத்தவர்களுக்கும் திருமதி ஆர்டர்ன் இரக்கம் காட்டியது அவருக்குப் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.

