கோலாலம்பூர்: மலேசியாவில் பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் தற்போதைய ஆட்சியில் முன்னணி வகிக்கும் பெர்சத்துக் கட்சிக்கும் அரசாங் கத்தை கடுமையாக விமர்சித்துக் கொண்டே ஆதரவு அளித்து வரும் அம்னோவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
வருகின்ற பொதுத்தேர்தலில் குறிப்பிட்ட 13 தொகுதிகளை ஒதுக்குவதில் இரு கட்சிகளுக்கு இடையே சிக்கல் நீடிக்கிறது.
2018ஆம் ஆண்டில் நடைெபற்ற பொதுத்தேர்தலில் அம்னோ படுதோல்வியைத் தழுவியது.
இந்தச் சூழ்நிைலயில் அக்கட்சியில் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் ஆளும் பெர்சத்துக் கட்சிக்குத் தாவியுள்ளனர்.
இந்த 15 தொகுதிகளில் 13 இடங்களில் யார் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்ய அம்னோவுக்கு பெர்சத்து அழைப்பு விடுத்தது.
ஆனால் இந்த அழைப்பை புறக்கணித்த அம்னோ, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
அந்த 15 தொகுதிகளும் மலாய் தேசிய கட்சிக்குச் சொந்தமானவை என்று அம்னோ வலியுறுத்துகிறது.
மலேசியாவை ஆளும் தேசிய கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய கட்சிகளான பெர்சத்துவும் அம்னோவும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய பெர்சத்துக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அஸ்மின் அலி, "எஞ்சிய 209 தொகுதிகளில் எங்களுக்கு இடையே எந்தவிதப் பிரச்சினையும் இல்லை," என்றார்.
ஆனால் 13 தொகுதிகளில் மட்டுமே சர்ச்சை நீடிக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.
"அம்னோவும் 13 தொகுதிகளில் போட்டியிட விரும்பினால் அது பற்றி பேசி தீர்த்துக்கொள்ளலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அம்னோவின் தேர்தல் பொறுப்பாளரான தாஜுதீன் அப்துல் ரஹ்மானின் வாதம் வேறுவிதமாக உள்ளது.
"கட்சித் தாவியவர்களின் அனைத்துத் தொகுதிகளையும் அம்னோ மீண்டும் கைப்பற்ற விரும்புகிறது. இதனால் பேசுவதற்கு ஒன்றுமில்லை," என்று அவர் கை விரித்து உள்ளார்.

