தோக்கியோ: அமெரிக்காவின் இரு அமைச்சர்கள், ஆசிய நட்பு நாடுகளுடன் உறவை மேம்படுத்தும் சூறாவளி சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். சீனாவுக்கு எதிரான அரணை தடுப்பு ஏற்படுத்துவது அவர்களின் நோக்கமாகும்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் தங்களுடைய ஆசிய பயணத்தின் முதல் காலடியை நேற்று தோக்கியோவில் பதித்தனர்.
அங்கு பிரதமர் யோஷிஹிடோவை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
பின்னர் இருவரும் சேர்ந்து தென்கொரியாவுக்குச் செல்கின்றனர். இந்தப் பயணத்திற்குப் பிறகு தற்காப்பு அமைச்சர் ஆஸ்டின் தனியாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஆனால் வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அமெரிக்காவுக்குத் திரும்பி அங்கு சீன உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகிறார்.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பு ஏற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகம், உலகின் எஞ்சிய நாடுகளுடனான உறவை சீர் செய்யும் முயற்சிகளை எடுத்து வருகிறது. முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்காவின் உறவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
வாஷிங்டன் போஸ்ட் திங்கட்கிழமை அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் "எங்களுடைய நண்பர்கள், பங்காளிகளுடனான உறவுக்குப் புத்துயிரூட்ட விரும்புகிறோம் என்று திரு ஆஸ்டினும் திரு பிளிங்கனும் கூறியதாக தெரிவித்திருந்தது.
சீனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் பயணமாகவும் இது அமைகிறது. சீனாவின் அச்சுறுத்தல்களைச் சந்திக்கும்போது ஒன்றுபட்ட சக்தி நம்மை பலப்படுத்தும் என்று கட்டுரை குறிப்பிட்டது.

