செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஆஸ்திரேலியாவில் நீதி கேட்டு

பெண்கள் ஆர்ப்பாட்டம்

கேன்பரா: ஆஸ்திரேலியாவில் நீதி கேட்டு ஆயிரக் கணக்கான பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும் திரண்ட அவர்கள் பெண் வன்முறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

'அமைதியாக இருக்காதீர்கள்', 'வன்முறையை நிறுத்துங்கள்' போன்ற முழக்கவாசகங்களை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர். "நாங்கள் இனியும் அமைதியாக இருக்க மாட்டோம்," என்றும் பெண்கள் முழக்கமிட்டனர்.

இதற்கிடையே பிரதமர் ஸ்காட் மோரிசனை தனிப்பட்ட முறையில் சந்திக்க ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்கவில்லை.

'அல்லா' வார்த்தை பயன்பாடு;

மலேசிய அரசு மேல்முறையீடு

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள கிறிஸ்துவ அமைப்புகள் தங்களுடைய வெளியீடுகளில் 'அல்லா' வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக அரசு நேற்று மேல்முறையீடு மனுவைத் தாக்கல்

செய்தது. உள்துறை அமைச்சு, அரசாங்கத்தின் சார்பில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டதை துணை தலைமைச் சட்ட அதிகாரி அப்துல் ரசாக் மூசா உறுதி செய்ததாக மலேசியகினியும் மலாய் மெயிலும் தெரிவித்தன.

தாய்லாந்து ஆர்ப்பாட்ட

தலைவரிடம் விசாரணை

பேங்காக்: தாய்லாந்தில் ஆர்ப்பாட்ட தலைவர் மீதான வழக்கு விசாரணை தொடங்கியிருக்கிறது. அரசாங்கத்தை கீழறுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் மன்னரை புண்படுத்தியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் 22 பேர் மீது ராணுவ ஆதரவு அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஆர்ப்பாட் டக்காரர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.