பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் எளிதான, விரைவான சேஃப்என்ட்ரி முறையைப் பயன்படுத்தி தங்கள் வருகையைப் பதிவு செய்யலாம்.
அதற்கு வழிவகுக்கும் புதிய 'சேஃப்என்டிரி கேட்வே பாக்ஸ்' சாதனத்தை இன்று (மார்ச் 16) நெக்ஸ் கடைத்தொகுதியில் அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகம் அறிமுகப்படுத்தியது.
இந்த முறை அந்தக் கடைத்தொகுதியில் பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து சோதிக்கப்பட்டு வந்தது.
வருகையாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்ய டிரேஸ்டுகெதர் செயலி, டிரேஸ்டுகெதர் கருவி மூலம் அவர்கள் செல்லும் இடத்தின் வாசலில் வைக்கப்பட்டுள்ள 'கேட்வே பாக்ஸ்' சாதனத்தில் மெல்ல தட்ட வேண்டும். அந்தச் சாதனம் கைபேசியைவிட சற்று பெரியதாக இருக்கும்.
கடைத்தொகுதி, பேரங்காடி போன்ற இடங்களின் நடத்துநர்கள் அந்த செயலி அல்லது கருவிக்குப் பதிலாக சேஃப்என்ட்ரி (வர்த்தகம்) செயலியைத் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன் மூலம் வருகையாளர்களின் வருகையைப் பதிந்துகொள்ளலாம்.
கடைத்தொகுதிகள், பெரிய சில்லறை விற்பனை கடைகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், கண்காட்சி, மாநாடு, சந்திப்புகள் நடைபெறும் 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் திரளும் தேரந்தெடுக்கப்பட்ட இடங்களில் 'சேஃப்என்ட்ரி கேட்வே' முறையைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நடப்பில் உள்ள 'க்யூஆர்' குறியீட்டையும் அடையாள அட்டையையும் பயன்படுத்தி வருகையைப் பதிவு செய்யும் முறையும் இந்த இடங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
அரசாங்கம் அடையாளம் கண்டி ருக்கும் அதிகமான மக்கள் வரத்தைக் கொண்டுள்ள இடங்களில் இந்தப் புதிய வருகைப் பதிவு முறை ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

